முட்டையிடும் கோழிகள் 23.8 செல்சியலிருந்து 29.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலையை தாங்கக்கூடியது. முட்டையிடும் கொட்டகையின் வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் போது கோழிகளின் உணவு உட்கொள்வது குறைந்து முட்டை உற்பத்திக் குறையும். 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும் போது இறப்பு வீதம் அதிகரிக்கும். மேலும் இடும் முட்டைகளின் தரமும் குறையும். எனவே கோடைக்காலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவையாவன.
- குளிர்ந்த சுத்தமான குடிநீர் தாராளமாக வழங்கப்படவேண்டும். முடிந்தால் குடிநீரில் ஐஸ்கட்டிகளை உடைத்துப் போட்டு குளிர்ந்த நீராகக் கொடுக்கலாம்.
- கோழிப்பண்ணை முழுவதும் ஆங்காங்கு நிழல் தரும் மரங்கள் இருக்கவேண்டும்.
- கூரைமீது அவ்வப்போது நீரைத் தூவுமாறு குழாய் அமைக்கலாம். இவ்வாறு கூரையின் மேல் நீர்த்தெளிப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.
- கம்பிவலை அமைப்புத் தேவைப்படும்போது சுத்தம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல காற்றோட்டம் இருக்கும்.
- பழையக் கூளங்களின் அடர்த்தியைக் குறைக்கவேண்டும். பழையக் கூளங்கள் நீக்கப்பட்ட இடத்தில் 2 அளவிற்குப் புதிய கூளங்களைப் பரப்பவேண்டும்.
- அதிகாலை நேரத்தில் செயற்கை ஒளிவிளக்குகளைப் போட்டு வெளிச்சம் அளிப்பதன் மூலம் கோழிகள் குளிர்ச்சியான நேரத்தில் அதிகத் தீவனம் எடுத்துக்கொள்ளும்.
- தீவனத்தில் அதிகக் குருணை சேர்ப்பதன் மூலம் கோழிகளுக்குக் கால்சியம் சத்துக் கிடைக்கும். இதனால் முட்டையின் ஓடுகள் சற்று கடினமாக எளிதில் உடையாததாகக் கிடைக்கும்.
- எலைக்டிரோலைட், விட்டமின் சி, நுண்ம உயிரிக்கலவைகள் போன்றவற்றை நீரில் கலந்து கொடுப்பதால் வெப்பத்தாக்கம் சற்றுக் குறையும்.
- மின்விசிறி வசதி அமைத்தல் சிறந்தது.
- நாளின் குளிர்ந்த காலை, மாலை வேளைகளில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தீவனங்களை அளிக்கவேண்டும்.
- கொட்டகையின் பக்கங்களில் ஈரமான சாக்குப் பைகளைத் தொங்கவிடுதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
- மண் பானைகளில் நீரை வைத்தால் எப்போதும் குளிர்ந்து இருக்கும்.
- தெளிப்பான்களை கொட்டகையினுள் ஆங்காங்கு அமைக்கவேண்டும்.